Thursday, January 3, 2013

உலகை உலுக்கிய கடைசி உரை!

அமெரிக்க பேராசிரியர் ராண்டி பாஷின் கதை மிகவும் மோசமானது. இருப்பினும் ராண்டி பாஷை பற்றி தெரிந்து கொண்டால் துயரமோ, பரிதாபமோ ஏற்படாது. அதற்கு பதிலாக புதிய உத்வேகமும், உள்ளத்தில் உறுதியுமே ஏற்படும். காரணம் பாஷ் தனது முடிவின் மூலம் மற்றவர்களுக்கு வாழ்க்கையின் மகத்துவத்தை கற்றுக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்.
ஒரு விதத்தில் அவர் தனது மரணத்தின் மூலம் மரணத்தை வென்று சாகாவரம் பெற்றிருக்கிறார்.
அவருடைய வாழ்க்கை எதிர்பாராவிதமாக பாதியில் முடிந்து விட்டாலும் கூட அந்த வேதனையையும், வலியையும் சக மனிதர்களுக்கான நம்பிக்கையாகவும் மேம்பட்ட வாழ்க்கைக்கான வேட்கையாகவும் மாற்றி தந்து இருக்கிறார்.
நெருக்கடி மிக்கவர்களும், பிரச்னையில் சிக்கித் தவிப்பவர்களும் அவரது வாழ்க்கையை அறிந்து கொண்டால் கவலைகளை உதறித் தள்ளி உற்சாகம் பெறுவார்கள். அதிலும் குறிப்பாக அவரது கடைசி உரையை கேட்க நேர்ந்தால் உள்ளத்தில் எழுச்சி பெறுவதோடு விரோதம், வன்மம், பொறாமை போன்ற வேண்டாத குணங்களுக்கும் விடை கொடுத்து விடுவார்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்களும் தன் முனைப்பு கொண்டவர்களும் கூட இந்த உரையை கேட்டால் மாறி விடுவார்கள்.
ஏற்கனவே 60 லட்சம் பேருக்கு மேல் இந்த உரையை கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர். நெகிழ்ந்து போயிருக்கின்றனர். பலர் அடிப்படையில் மாறியிருக்கின்றனர். இன்னமும் கூட ஆயிரக்கணக்கானோர் அவரது உரையை கேட்டு உருகிக் கொண்டிருக்கின்றனர். உணர்வு ரீதியாக ஒரு ரசவாதத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது என்னும் வகையில் பாஷ் நிகழ்த்திய அந்த உரையை உலகப் பேரூரை என்றே சொல்லலாம். சரித்திர பேரூரைகளில் சமகாலத்து சாதனை உரையாக இதனை சேர்த்துக் கொள்ளலாம்.
ராண்டி பாஷ் இந்த உரையை திட்டமிட்டும் நிகழ்த்தவில்லை. தனது உரை இப்படி லட்சக்கணக்கானோரை பாதிக்கும் என்றும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. காலம் அவரது கணக்கை முடித்துக் கொள்ள முற்பட்டபோது தான் மிக மிக நேசித்தவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்ளும் நோக்கத்துடனே அந்த உரையை நிகழ்த்தினார். அதில் இருந்த உண்மையும், வாழ்வின் சாரம்சத்தை பிழிந்து தந்த தன்மையும் அனைவரையும் ஆட்கொண்டு விட்டது.
பாஷ் எந்த சூழ்நிலையில் இந்த உரையை நிகழ்த்தினார் என்பதை தெரிந்து கொண்டால் அதன் உன்னதத்தை உள்ளபடியே புரிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைகளில் ஒன்றான கார்னகி மெலான் பல்கலையில் கம்ப்யூட்டர் துறை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பாஷ். பால்டிமோர் நகரில் பிறந்து கொலம்பியாவில் வளர்ந்த அவர், கார்னகி மெலான் பல்கலையில் கம்ப்யூட்டர் அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்ற பிறகு வர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார்.
1988 முதல் 1997 வரை அங்கு பணியாற்றிய பாஷ், 1997ல் கார்னகி மெலான் பல்கலையில் பேராசிரியரானார். கம்ப்யூட்டர் இடைமுகம் சார்ந்த பிரிவில் அவரது அறிவும், அனுபவமும் விசாலமானது. அலைஸ் சாப்ட்வேர் திட்டம் உட்பட பல்வேறு தொழில்நுட்ப பணிகளில் முக்கிய பங்காற்றிய அவர் தனது வட்டத்தில் ஒரு நட்சத்திர பேராசிரியராகவே திகழ்ந்தார்.
கம்ப்யூட்டர் சார்ந்த ஆய்விலும், தனது ஞானத்தை மாணவர்களோடு பகிர்ந்து கொள்வதிலும் மட்டுமே பாஷ் கவனம் செலுத்தி வந்த நேரத்தில்தான் சோதனை சூறாவளி அவர் வாழ்க்கையை உலுக்கியது.
2006 ஆம் ஆண்டில் அவர் கணையப்பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு பயன்தராத நிலையில் 2007 ஆகஸ்டு மாதம் ஆறு மாதம் மட்டுமே அதிகபட்சமாக அவரால் உயிரோடு இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறினர்.
இந்தச் செய்தி பாஷை நிலைக்குலைய வைத்தது. உடனே வேலையை ராஜினாமா செய்து விட்டு உயிரோடு இருக்கப் போகும் நாட்கள் முழுவதையும் மனைவியோடும், மூன்று பிள்ளைகளோடும் செலவிட வேண்டும் என்றும் முடிவுக்கு வந்தார். வாழ்க்கை முடியப் போகிறது. தான் இல்லாமல் போகிறோம் என்ற நிலையில் தகப்பனாகவும், கணவனாகவும் தனது கடமைகளை இயன்றவரை நிறைவேற்றி விட்டு குடும்பத்தினரிடம் இருந்து விடைபெற விரும்பினார்.
இந்த நிலையில்தான் பல்கலையில் உரை நிகழ்த்துவதற்கான அழைப்பு வந்தது. குடும்பத்தோடு ஒவ்வொரு நொடியையும் செலவிட விரும்பிய போதும் பாஷ் கடைசியாக ஒரேயொரு முறை உரை நிகழ்த்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். அவரது மனைவிக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் கணவரின் மனதை புரிந்து கொண்டதால் தயக்கத்தோடு சம்மதித்தார்.
அந்த உரை எத்தனை உன்னதமானதாக அமையப் போகிறது என்பதை ‘பாஷ்’ உட்பட யாரும் அறிந்திருக்கவில்லை. தனக்கு பின்னால் பிள்ளைகளுக்கு தான் சொல்ல விரும்பும் செய்தியாக அந்த கடைசி உரை அமைய வேண்டும் என பாஷ் நினைத்திருந்தார். மற்றபடி யாருக்கும் அறிவுரை கூறவோ, வாழ்க்கையை புரிய வைக்கவோ அவர் முயலவில்லை.
உரையின் கருப்பொருளும் கூட கடைசி வரை என்பதுதான். ஆம் கார்னகி மெலான் பல்கலையில் அப்படியொரு பழக்கம் இருந்தது. ஆண்டுதோறும் அனுபவம் வாய்ந்த பேராசிரியரை அழைத்து உங்கள் வாழ்க்கை முடிய 6 மாதங்களே உள்ளது என்றால் நீங்கள் பகிர்ந்து கொள்ளப் போகும் விஷயங்கள் என்னவாக இருக்கும் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த கேட்டுக் கொள்ளப்படுவார்கள். ராண்டி பாஷ் விஷயத்திலோ உண்மையிலேயே அவருக்கு உயிர் வாழ ஆறு மாத காலமே அவகாசம் இருந்தது.
ஆக எல்லாவிதத்திலும் கடைசி உரையாற்ற அவர் மேடையேறினார். தனது உரையை கேட்க அதிகபட்சமாக 50 பேர் வருவார்கள் என அவர் நினைத்திருந்தார். ஆனால் நானூறு பேர் அமரக் கூடிய அரங்கம் நிரம்பி வழிந்ததோடு அவர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர். இந்த வரவேற்பால் நெகிழ்ந்து போன பேராசிரியர் மிகவும் அடக்கமாக தனது உரை இத்தகைய வரவேற்புக்கு தகுதியாக அமைய வேண்டும் என கூறி விட்டு பேசத் தொடங்கினார்.
அவரது பேச்சில் வருத்தத்தின் சாயலோ, வேதனையின் வெளிப்பாடோ துளியும் இல்லை. தன்னை பாதித்த நோய் பற்றி அவர் குறிப்பிடக்கூட இல்லை.
அதற்கு மாறாக பேராசிரியர் பாஷ், தனது வாழ்க்கையை திரும்பிப் பார்த்து அதில் கற்றுக் கொண்ட பாடங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக குழந்தை பருவத்து கனவுகளை உற்சாகமாக குறிப்பிட்டார்.
சிறு வயதில் சுவற்றில் தான் கிறுக்கித் தள்ளிய போதும், ஓவியங்களை வரைந்த போதும், பெற்றோர்கள் தடுக்காமல், தண்டிக்காமல் ஊக்குவித்ததை நினைவு கூர்ந்த அவர், தன்னுடைய திறமைகள் வளர இதுவே காரணமாக அமைந்தது என்று கூறி விட்டு உங்கள் பிள்ளைகள் சுவற்றில் கிறுக்க விரும்பினால் தயவு செய்து அனுமதியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
மற்றவர்களிடம் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார். தேவையான அளவு பொறுமையாக இருந்தால் மற்றவர்களிடம் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பின்னடைவுகளையும், தோல்வி களையும் கண்டு துவண்டு விடக் கூடாது என்று கூறிய பாஷ், செங்கல் சுவர்கள் ஒன்றும் வெற்றுச் சுவர்கள் இல்லை. அவை ஒரு விஷயத்தை பெற நாம் எந்த அளவுக்கு துடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துவதாகவும் குறிப்பிட்டார்.
உணர்ச்சி பெருக்கான இந்த உரைக்கு நடுவே நோயின் தாக்கத்தை மீறி தன்னுடைய உள்ள உறுதியை காட்டுவதற்கான அங்கேயே உடற்பயிற்சியும் செய்து காட்டி மெய்சிலிர்க்க வைத்தார்.
கிட்டத்தட்ட 70 நிமிடம் நீடித்த அந்த உரையின் போது அங்கு கூடியிருந்தவர்கள் தங்களது நோக்கங்களையும் லட்சியங்களை யும் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டியதற்கான காரணங்களை தெரிவித்ததோடு மற்றவர்களுடைய திறமைகளையும், குறைகளையும் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றார்.
தனக்கு ஊக்கமளித்த முன்னோடிகளை குறிப்பிட்டு அவர் திறந்த மனேதாடு தன்னை பாதித்த மேதைகள் பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். எல்லா வற்றுக்கும் மேல் வாழ்க்கையின் அன்பின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். புன்சிரிப்போடு அவர் அனுபவங்களை விவரித்து வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்ததை கேட்ட பார்வையாளர்கள் அனைவரும் நெகிழ்ந்து போயினர். மரணத்தின் நிதர்சனத்தை எதிர்கொள்பவரால்தான் வாழ்வின் அருமையை புரிந்து கொள்ள முடியும். ஆறு மாதங்களில் மரணம் என்பது உறுதியாக தெரிந்து விட்ட நிலையில் உயிரோடு உள்ள ஒவ்வொரு நொடியின் முக்கியத் துவத்தையும் அவர் உணர்ந்து பேசினார். இது போன்ற நேரத்தில் பொறாமைக்கும் பகைமைக்கும் இடம் கொடுக்கத்தோன்றுமா என சிந்திக்க வைத்து அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தார். அரங்கில் இருந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை அவர் பேச்சு புரட்டிப் போட்டதாக உணர்ந்தனர்.
பாஷின் அந்த இறுதி உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்த பார்வையாளர்களை கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்.
அத்தகைய அதிர்ஷ்டசாலிகளிடம் பத்திரிகையாளர் ஜெப்ரே ஜாஸ்லோவும் ஒருவர். ஜாஸ்லோ, புகழ் பெற்ற “வால்ஸ்டீரிட் ஜர்னல்’ நாளிதழில் சிறப்பு பத்தி எழுதுபவராக பணியாற்றி வருபவர். வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தே அவர் அதிகம் எழுதியிருக்கிறார். எனவே தான் அவருடைய நாளிதழ் ஆசிரியர்களில் ஒருவர் ராண்டி பாஷ் கடைசியாக உரையாற்ற இருப்பதை தெரிவித்து அவரைப் பற்றி எழுதலாமே என்று யோசனை கூறியிருந்தார். ஜாஸ்லோவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போதே அவர் துயரமோ, வலியின் சாயலோ இல்லாமல் உற்சாகமாக பேசியிருக்கிறார். தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோதே ஜாஸ்லோ எப்படியும் அவரது உரையை நேரில் கேட்க வேண்டும் என தீர்மானித்தார்.
ஆனால் சோதனையாக அவரால் பேராசிரியரின் உரையை நேரில் கேட்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஜாஸ்லோ இருந்தது வாஷிங்டனில் அங்கிருந்து பிட்ஸ்பர்கில் உள்ள பல்கலைக்கு விமானத்தில் செல்ல வேண்டும். ஜாஸ்லோவின் ஆசிரியரோ, விமான செலவை நிறுவனத்தால் ஏற்க முடியாது. எனவே உரை நிகழ்த்திய பின் தொலைபேசியிலேயே பேசிக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். ஜாஸ்லோவுக்கு பேராசிரியரின் உரையை தவற விடக் கூடாது என உள்ளுணர்வு கூற காரிலேயே 300 மைல் பயணித்து பல்கலைக்கு சென்று விட்டார்.
பேராசிரியரின் உரை அவரை உருக வைத்தது. தன்னுள் ஏற்பட்ட பாதிப்பை அழகிய கட்டுரையாக்கி விட்டு அந்த பேரூரைக்கான வீடியோ இணைப்பையும் கட்டுரை வெளியானவுடன் நாளிதழ் இணைய தளத்தில் கொடுத்திருந்தார்.
வீடியோ இணைப்பு மூலம் உரையை கேட்டவர்களும் உருகிப் போயினர். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே வாழ்க்கையின் தன்மை மாறியதை உணர்ந்தனர். பலர் பேராசிரியரை இமெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் உள்ளத்து உணர்வுகளை தெரிவித்தனர். ஒரு சிலர் பேராசிரியருக்கு ஆறுதல் கூறினர் என்றால் பெரும்பாலானவர்கள் தங்கள் அகக் கண்களை அவர் திறந்து விட்டதாக தெரிவித்தனர். சிலர் இனி தங்கள் பிள்ளைகள் சுவரில் கிறுக்கினால் தடுக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். இன்னும் சிலரோ மற்றவர்களின் குறைகளை பெரிதாக நினைக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். சிலரோ எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசுவோம் என்றனர். ஒவ்வொருவரிடமும் பேராசிரியரின் சொற்கள் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
கொடிய நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவரது பேச்சை கேட்டு ஊக்கம் பெற்றதாக கண்ணீர் விட்டனர்.
அதே உணர்வோடு தங்கள் நண்பர்களுக்கு அந்த உரையை பரிந்துரைத்தனர். அவர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரைத்தனர். விரைவில் பேராசிரியரின் உரை யூடியுப்பில் பதிவேற்றப்பட்டு ஆயிரக் கணக்கானோரால் பார்க்கப்பட்டது. வெகு சீக்கிரத்தில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டி பல லட்சங்களை தொட்டது. நூற்றுக்கணக்கான வலைப்பதிவாளர்கள் பேராசிரியர் பாஷின் உள்ள உறுதி மற்றும் அவர் வழங்கிய உள்ளொளியை போற்றினர்.
பாஷ் குறிப்பிட்ட செங்கல் சுவர் ஒரு குறியீடானது. பலர் தங்கள் விலை மனைகளில் செங்கல் சுவரை வரைந்து பாஷ் சொன்னதை எழுதி வைத்தனர்.
பாஷின் உரை பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. பல ஊர்களில் வீடியோ பதிவு திரையிடப்பட்டது. இந்தியாவில் கூட ஒரு பல்கலையில் இந்த வீடியோ காட்சி காண்பிக்கப்பட்டது. அமெரிக்க ஊடகங்கள் இந்த எழுச்சியான எதிர்வினையை செய்தியாக்கி பேராசிரியரை சாகாவரம் பெற வைத்தன.
பேராசிரியர் பாஷ், இத்தகைய பாதிப்பை தனது உரை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மற்றவர்களின் அன்பால் அவர் திக்குமுக்காடிப் போனார்.
மீடியா அவரது உரையை மிகச் சிறந்த பேரூரை, வாழ்வின் உன்னதமான விஷயம், ஒவ்வொரு நொடியின் மதிப்பை உணர்த்தும் உரை என்றெல்லாம் வர்ணித்தன.
பேராசிரியரிடம் வாழ்க்கையை கற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தின. பேராசிரியர் தனது கருத்துக்களையும், வாழ்க்கைக்கான வழிமுறைகளையும் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பேராசிரியரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கோரிக்கையை கணவரிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் பாஷோ தனக்கென எஞ்சியிருக்கும் நாட்களை மனவை மற்றும் பிள்ளைகளோடு செலவிட விரும்பினார். குடும்பத்தை விட்டு ஒரு நொடி கூட பிரிந்திருக்க கூடாது என நினைத்தவர் புத்தகம் எழுதுவது அதற்கு பெரும் தடையாகி விடுமே என அஞ்சி நடுங்கினார்.
எல்லோருக்கும் இது புரிந்தது. ஆனாலும் கூட பேராசிரியரின் அனுபவ பொக்கிஷம் புத்தகமாக பதிவு செய்யப்பட்டால் வருங்கால தலைமுறைக்கெல்லாம் வழிகாட்டுமே என நினைத்தனர்.
இறுதியில் பாஷோ ஒரு யோசனையை கூறி இதற்கு ஒப்புக் கொண்டார். சிகிச்சையின் பலனாக அவரது நோயின் தீவிரம் தற்காலிகமாக குறைந்திருந்தது. கதிரியக்க சிகிச்சையை தாங்க அவர் தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டும் பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.
அந்த ஒரு மணி நேரத்தை புத்தகம் எழுத ஒதுக்க ஒப்புக் கொண்டார். சைக்கிள் ஓட்டியபடி அவர் புத்தகத்திற்கான விஷயங்களை கூற, பத்திரிகையாளர் ஜாஸ்லோ அதை கேட்டு குறிப்புகள் எடுத்து எழுத வேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்படியாக காதில் மைக்கை மாட்டிக் கொண்டு ஜாஸ்லோ பேராசிரியர் எண்ண ஓட்டங்களை குறிப்பெடுத்து புத்தகத்தை எழுதி முடித்தார். புத்தகத்தின் தலைப்பும் “கடைசி உரை” தான்

No comments:

Post a Comment